எப்படி இயங்குகிறது #MaiamWhistle ஆப்?
ஒவ்வொரு மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடத்தி, கட்சிக்கென அலுவலகங்கள் திறந்து, மக்களை உறுப்பினர்களாகச் சேர்த்து, மக்களோடு போராட்டங்களில் நேரடியாகக் களத்தில் இணைந்து என மக்களோடு மக்களாகக் கட்சிகள் இயங்கியது ஒரு காலம். இந்தப் பணிச்சுமையையும், நெருக்கத்தையும் தற்போது பாதியாகக் குறைத்துவிட்டது தொழில்நுட்பம். இன்று பெரும்பாலான கட்சிகளில் மொபைல்போன் மூலமாகவே உறுப்பினராகிவிட முடியும். கட்சித்தலைவர்களின் உரைகளையும், கட்சியின் அறிக்கைகளையும் சோஷியல் மீடியாக்களிலேயே பார்த்துவிட, படித்துவிட முடியும். அந்தளவிற்கு இன்றைய கட்சிகளுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குகிறது தொழில்நுட்பம். அதனால்தான் தேசியக் கட்சியில் இருந்து லெட்டர்பேடு கட்சிகள் வரை அத்தனையும் அதன் வசதிக்கேற்ப ஐ.டி விங்குகளை வைத்துக்கொண்டு சுற்றுகின்றன. இந்த ஃபார்முலாவை கட்சியைத் தொடங்குவதற்கு முன்பிருந்தே பின்பற்றத்தொடங்கிவிட்டார் கமல். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சிப்பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, 'மய்யம் விசில்' என்ற செயலியின் பெயரை அறிவித்து அரசியலுக்கு அச்சாரம் போட்டவர், கடந்த ஏப்ரல் 30-ம் தேதி செயலியையும் வெளியிட்டார்.
சமூகப் பிரச்னைகளுக்கான ஆராய்ச்சி மணியை எங்கிருந்து வேண்டுமானாலும் அடிக்கலாம் என்பதுதான் இந்தச் செயலியின் சிறப்பம்சம். வெளியிடப்பட்ட அடுத்த நாளில் இருந்தே, இதன் மூலம் பெறப்பட்ட புகார்கள் குறித்தும், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கமல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகிறார். மக்களின் புகார்களை அரசாங்கத்தின் செவிகளுக்கு கொண்டுசெல்லும் ஓர் ஊடகமாக, விசில் செயலி பரவலாகப் பாராட்டப்பட்டாலும், இதில் புகார் அளிக்கவேண்டுமென்றால் கண்டிப்பாக மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினராக வேண்டுமே என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
எப்படி செயல்படுகிறது மய்யம் விசில்?
ஆப்-ஐ டவுன்லோடு செய்துவிட்டு, பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை மட்டும் கொடுத்தால் போதும் உடனே கணக்கு தொடங்கப்பட்டதற்கு அடையாளமாக நம் மொபைலுக்கு OTP வரும். அது செயலிக்கான அக்கவுன்ட் மட்டுமல்ல; மக்கள் நீதி மய்யத்திற்கான உறுப்பினர் எண்ணும்கூட. பின்னர் பாஸ்வேர்டு செட் செய்துவிட்டு உள்ளே நுழைந்தால், கமலின் வீடியோ உங்களை வரவேற்கும். அதனைப் பார்த்து முடித்துவிட்டால் போதும்; மய்யம் விசில் ரெடி. சாதாரண குடிமகன் அல்லது சாம்பியன் என இரண்டுவிதமாக இதில் பதிவுசெய்துகொள்ள முடியும். குடிமகனாகப் பதிவு செய்தால், செயலியில் புகார்களைப் பதிவுசெய்யவும், பார்க்கவும் முடியும். சாம்பியனாகப் பதிவு செய்தால், பிறர் புகார்களைப் பார்த்து அது சரியானது என உறுதிசெய்யவும் முடியும்.
மய்யம் விசிலில் பதியப்படும் புகார்கள் அனைத்தும், உடனுக்குடன் நிர்வாகிகளால் சரிபார்க்கப்பட்டு பின்னர் செயலியில் வெளியிடப்படும். இந்தப் புகார்களை தொகுதி வாரியாகப் பார்க்க முடியும். இந்தப் புகார்களின் உறுதித்தன்மையை சரிபார்த்த பின்புதான் மக்கள் நீதி மய்யம் அந்தப் புகாரை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும். இந்த முதல்கட்ட சரிபார்ப்புக்காக, புகார் பதிவு செய்யப்பட்ட தொகுதியில் இருக்கும் மூன்று சாம்பியன்களின் ஒப்புதல் தேவை. அவர்கள் ஒப்புதல் அளித்தபின்னர் அந்தப் புகார்கள் கட்சி நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்படும். இந்தச் செயலியில் வரும் புகார்களைக் கையாள்வதற்காக மண்டல வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். உறுதிசெய்யப்பட்ட புகார்கள் அனைத்தும் அவர்களிடம் கொடுக்கப்பட்டதும், அவர்கள் அதன் மேல் நடவடிக்கைகள் குறித்து முடிவெடுத்து துறைசார்ந்த அதிகாரிகளிடம் கொண்டு செல்வார்கள். நிறைய பிரச்னைகள் குவியும்போது பிரச்னையின் வீரியத்தைப் பொறுத்து, முன்னுரிமை தந்து பரிசீலிப்பார்கள். இப்படி அரசிடம் கொண்டுசெல்லப்பட்ட புகார்கள், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்றவை அனைத்தும் செயலியில் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும். பொதுவாகப் பார்த்தால், மக்கள் புகார்களைப் பதிவு செய்வதற்காகவும், தங்களைச் சுற்றியிருக்கும் பிரச்னைகளை அறிந்துகொள்வதற்காகவும் ஒரு நல்ல செயலி என்றுதான் தோன்றும்
