கோப்பை யாருக்கு?
இன்றுடன் முடிகிறது ஐபிஎல் திருவிழா:
கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி தொடங்கி ஒன்றரை மாதத்துக்கும் மேலாக நடந்துவந்த ஐபிஎல் தொடர், இன்றுடன் முடிவடைகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை செய்கின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ஏற்கனவே 2010, 2011–ம் ஆண்டுகளில் ஐ.பி.எல். பட்டத்தை ருசித்து இருக்கிறது. இரண்டு ஆண்டு கால தடை காலத்திற்கு பிறகு மறுபிரவேசம் செய்திருக்கும் சென்னை அணி, மீண்டும் தங்கள் பலத்தை நிரூபித்து நீண்ட கால ஏக்கத்தை தணிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி, பவுலிங்கில் சிறந்த அணியாக திகழ்கிறது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடுகின்றனர். ஆனால், மிடில் ஆர்டர் தொடர்ச்சியாக சொதப்புகின்றனர். இரண்டாவது தகுதி சுற்று போட்டியில், ரஷீத் கான் அதிரடியாக பேட்டிங் செய்து மிரட்டினார். அதனால் மிடில் ஆர்டர் சொதப்பும் பட்சத்தில் ஹைதராபாத் அணி ரஷீத் கானை சார்ந்திருக்கும்.
வெல்லப்போவது யார்?
இந்த சீசனில் சென்னை அணியின் பந்து வீச்சு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், பேட்டிங்கில் அசத்தி வருகிறது. அம்பத்தி ராயுடு (586 ரன்), கேப்டன் டோனி (455 ரன்), வாட்சன் (438 ரன்), ரெய்னா (413 ரன்) உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். முந்தைய ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் அரைசதம் விளாசி தோல்வியின் விளிம்பில் இருந்து சென்னை அணியை காப்பாற்றினார். சென்னை அணியை பொறுத்தவரை குறிப்பிட்ட வீரரை நம்பி இருக்கவில்லை. இதுவரை 8 வீரர்கள் ஆட்டநாயகன் விருது பெற்றிருப்பதே அதற்கு சான்று. பந்து வீச்சில் நிகிடி, தீபக் சாஹர், ஜடேஜா, ஷர்துல் தாகூர் ஓரளவு நம்பிக்கை தருகிறார்கள்.
ஏற்கனவே ஐதராபாத் அணியை லீக் சுற்றில் இரண்டு முறையும், இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்றிலும் புரட்டியெடுத்து இருப்பதால் சென்னை அணி மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.
இரு அணிகளின் கேப்டன்களுமே நல்ல ஃபார்மில் உள்ளனர். சமபலம் வாய்ந்த, சிறந்த கேப்டன்களை கொண்ட இரு அணிகள் இறுதி போட்டியில் மோதுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ரூ.20கோடி பரிசு:
வெற்றி பெறும் அணிக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ.20 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். தோல்வி அடைந்து 2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.12½ கோடி கிடைக்கும். இதே போல் ஆரஞ்சு நிற தொப்பியை தக்கவைக்கும் பேட்ஸ்மேனுக்கு ரூ.10 லட்சமும், ஊதா நிற தொப்பியை கைப்பற்றும் பவுலருக்கு ரூ.10 லட்சமும் கொடுக்கப்படும்.





No comments:
Post a Comment